சென்னை: தமிழ்நாட்டில்  உள்ள 534 கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “செஸ் விளையாட்டு தோன்றிய தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தமிழகத்திற்கு பெருமை. செஸ் ஒலிம்பியாட் பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று முன்தினம் தொடங்கிவைக்கப்பட்ட நிலையில், போட்டிக்கான காய் நகர்த்துதலை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கிவைத்தார் என்றார்.

தொடர்ந்து பேசியவர், நாட்டின்  75-வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றும் இயக்கம் நடத்தப்படவுள்ளது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுகூரும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மக்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்க இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 34,000 கிராமங்களில் 4ஜி  சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக சுமார் ரூ.26,000 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தவர், இதன்மூலம் தமிழ்நாட்டில் 534 கிராமங்கள் பயன்பெறும். அதற்கான  கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், சந்தைப்படுத்துதலும் வலிமைப்படுத்தப்படும் என்றார்.

இந்தியா முழுவதும் 75 கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்பட மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தவர்,  தமிழ்நாட்டில் சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் சுத்தப்படுத்தப்படும்.

சென்னை காசிமேடு, கேரளாவில் கொச்சி, ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கான செலவில், சாகர்மாலா திட்டம் மற்றும் மத்திய மீன்வள அமைச்சகம் சார்பில் 50:50 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் முடிவடைந்து, விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.

இவ்வாறு கூறினார்.