திருப்பதி: திருமலை வெங்கடேஷ்வரா ஆலயத்தில் பின்பற்றப்பட்டுவரும் பட்டியல் 1, பட்டியல் 2 மற்றும் பட்டியல் 3 ஆகிய விஐபி தரிசன முறைகள் நீக்கப்பட்டு, விரைவில் புதிய முறை குறித்த அறிவிப்பு வெளிவருமென திருமலா திருப்பதி தேவஸ்தான வாரிய தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பொதுநல வழக்கொன்றும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பா ரெட்டி கூறியதாவது, “இனிவரும் நாட்களில், ஆலயத்திற்கு வரும் ஒவ்வொரு பக்தரும், கடவுளை தரிசிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். இதுதொடர்பாக, நான் ஏற்கனவே EO மற்றும் JEO ஆகியோரிடம் பேசியுள்ளேன். இந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அவர்களின் குரலுக்கு செவிமடுப்போம். அடுத்த சில நாட்களில், முக்கிய விருந்தினர்களுக்கான புதிய புரோடோகால் அமைப்பை நாங்கள் அறிவிப்போம்” என்றார்.

முக்கிய விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் சலுகையால், அவர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்து, மிக எளிதாக தரிசனம் செய்து கிளம்பி விடுகிறார்கள். ஆனால், நீண்ட வரிசையில் நாள் முழுவதும் காத்திருக்கும் மக்கள்தான் பல சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

பட்டியல் 1 என்பதில் நீதிபதிகள், உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரும், பட்டியல் 2 என்பதில் தேவஸ்தான ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் ஆகியோரும், பட்டியல் 3 என்பதில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், தேவஸ்தான ஊழியர்கள் ஆகியோரின் சிபாரிசு கடிதம் பெற்று வருவோரும் அடங்குவர்.