திருவனந்தபுரம்: அரசு கல்வி நிறுவனங்களைப்போல், தனியார் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்டப் பெண்களுக்கு பேறுகால விடுப்பும் சலுகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கேரள மாநில அரசு.
இதுதொடர்பாக கேரள அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கு பேறுகால சலுகைகள் வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பை வெளியிட மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசின் ஊழியர்களுக்கு இணையாக கேரளத்தின் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட பெண்களுக்கு, 26 வார ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுமுறை கிடைக்கும்.
இதுதவிர, பேறுகால சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். பேறுகால மருத்துவச் செலவுகளுக்காக, பெண் ஊழியர்களுக்கு, தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ.1000 வழங்க வேண்டும். இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே இத்தகைய ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் கேளரம்தான் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.