டில்லி

மத்திய பாஜக அரசு நாட்டுப்பசுக்களைக் காக்கப் பல திட்டங்கள் தீட்டியும் வெளிநாட்டுப் பசுக்கள் எண்ணிக்கை 32% உயர்ந்து உள்நாட்டுப் பசுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பசு பாதுகாப்பில் மும்முரமாக இருந்து வருகிறது.   குறிப்பாக உள்நாட்டுப் பசுக்களை அனைவரும் வளர்க்க வேண்டும் என அரசு பிரசாரம் செய்து வருகிறது.  உள்நாட்டுக் கறவை பசுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ராஷ்டிரிய கோகுல் மிஷன் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

மத்திய விவசாயத்துறை அமைச்சகம் இந்த வருடத்துக்கான கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தி மொத்தமுள்ள கால்நடைகள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.   இந்த கணக்கெடுப்பின்படி ஆதரவற்று திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனதாகக் கூறப்படுகிறது.   அத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது

இதற்கு முக்கிய காரணம் மாடுகளை வெட்டுவதை மத்திய அரசு மிகவும் கடுமையான சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது என பல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.    அத்துடன் பசுக் காவலர்களும் மாடுகளை மாமிசத்துக்காக விற்பதைத் தொடர்ந்து எதிர்த்து வருவதால் பல விவசாயிகள் பால் கொடுக்காத மாடுகளை ஆதரவின்றி விட்டு விடுகின்றனர்.

மத்திய விவசாயத்துறை அமைச்சகம் இது குறித்த முழு விவரங்களையும் வெளியிடாத போதிலும் ஒரு சில தகவல்கள் கசிந்துள்ளன.   அதன்படி வெளிநாட்டுக் கலப்பின கறவை மாடுகளின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டை விட 32% அதிகரித்துள்ளன.    அதே வேளையில் உள்நாட்டுக் கறவை மாடுகளின் எண்ணிக்கை 1% க்கும் குறைவாகவே உயர்ந்துள்ளன.     வெளிநாட்டுக் கறவை மாடுகளின் எண்ணிக்கை 1.9 கோடியில் இருந்து 2.5 கோடியாக உயர்ந்துள்ளன எனக் கூறப்படுகிறது.   உள்நாட்டுக் கறவை மாடுகளின் எண்ணிக்கை 4.81 கோடியில் இருந்து 4.85 கோடியாகி உள்ளது.