டில்லி:
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, புதிய கட்சியை துவக்குகிறார்.
“சிக்ஸர் சித்து” என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, விளையாட்டலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பா.ஜ.க.வில் இணைந்தார். பாராளுமன்ற எம்.பியாகவும் ஆனார்.
இந்த நிலையில் பா.ஜ.கவில் இருந்து விலகிய சித்து, ராஜ்யசபா பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் ஆம்ஆத்மி கட்சியில் சேர்வார் என்றும், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் செய்திகள் அடிபட்டன.
ஆனால், சித்துவை முதல்வர் வேட்பாளராக்க, ஆம்ஆத்மி கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனிக்கட்சி துவக்கும் முடிவுக்கு வந்தார் சித்து.
இந்த நிலையில், இன்று, “ஆவாஸ் இ பஞ்சாப்” என்ற கட்சியை துவக்குவதாக சித்து அறிவித்திருக்கிறார். இவருடன் பிரபல முன்னாள் ஹாக்கி வீரர் பர்கத் சிங்கும் இணைந்திருக்கிறார். அதோடு, பஞ்சாபில் புகழ் பெற்ற அரசியல் பிரமுகர்களான “பெய்ன்ஸ் சகோதரர்களும்” சேர்ந்திருக்கிறார்கள்.
விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில், சித்து சிக்ஸர் அடிப்பாரா, பெவிலியனுக்கு திரும்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.