சென்னை,

தியேட்டர்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டண விவரங்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பில், சைக்கிள் நிறுத்துவதற்கு கட்டணம் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் அநியாயமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்தது 20 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மணி கணக்கில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில், ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய் வசூலிக்கும் அக்கிரமும் நடைபெற்று வருகிறது.

இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது. தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் முதல்வரிடம் இதுகுறித்து மனு கொடுத்திருந்தது.  இந்நிலையில், புதிய பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்தி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சிகள் மற்றும் சிறப்புநிலை நகராட்சிகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 7 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 3 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எந்த தியேட்டரிலுமே சைக்கிள் நிறுத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இலவசமாகவே நிறுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டண முறை, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]