திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் விளைநிலங்களின் நடுவில் புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாய கிராமங்களான கமலாபுரம், எருக்காட்டூர், வெள்ளக்குடி, கொரடாச்சேரி, அடியக்கமங்களம் போன்ற பல கிராமங்களில் ஓ என் ஜி சி நிறுவனம் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  கிட்டத்தட்ட 100 இடங்களில் இது போன்ற பணிகள் நடப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இது தவிர நன்னிலம் அருகிலுள்ள தென்னெஞ்சேரி கிராமத்தில் விளைநிலங்களின் நடுவில் புதிய எண்ணெய் கிணறு அமைக்க ஓ என் ஜி சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.  இதற்கு நன்னிலம் தென்னெஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார 40 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஓ என் ஜி சி அதிகாரிகள், “தென்னெஞ்சேரி பகுதியில் கச்சா எண்ணெய் இருக்கிறதா என்னும் ஆய்வுப் பணியின் முதல்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  தவிர எண்ணெய்க் கிணறு ஏதும் அமைக்கப்படவில்லை.  மீத்தேன் திட்டமோ ஹைட்ரோ கார்பன் திட்டமோ நடத்தப்படவில்லை.   விவசாயிகளும், மக்களும் தேவையற்ற அச்சத்தை கைவிட வேண்டும்” என கூறி உள்ளனர்.