விழுப்புரம்

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில்  ஊஞ்சல் உற்சவத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விழுப்புரம் மாவடட்டத்தில் உள்ள மேல்லையனூர் அங்காளம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கு  லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்த நிலையில் மேல்மலையனூரைச் சேர்ந்த ஞானவேல், அசோக் ஆகியோர் செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.

அந்த மனுவில் “கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர், தங்கும் வசதி, பேருந்து போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும்  கோவில் நிர்வாகமோ , மாவட்ட நிர்வாகமோ செய்யவில்லை.  லட்சக்கணக்கான பக்கர்கள் கூடும் நேரத்தில், மிகவும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, நாளை வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் ஊஞ்சல் உற்சவத்தை நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

எதிர் தரப்பினராக, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோரை குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை, விசாரித்த நீதிபதி வெங்கடேசன், “மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாமல் திருவிழா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடப்பதாக ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பு அளித்துள்ளது.   ஆனால், கோவில் நிர்வாகம் இதை பொருட்படுத்தவில்லை.   ஆகவே, அமாவாசை அன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த இடைக்கால தடை உத்தரவு அடுத்த மாதம் 7-ந் தேதி வரை பிறப்பிக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.

ஆகவே, நாளை (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்த ஊஞ்சல் உற்சவம் தடைபட்டுள்ளது. வழக்கத்தைவிட  நாளை அதிகமான பக்தர்கள் வருவார்கள். ஏனென்றால் மற்ற மாதத்தை விட தை அமாவைசை அன்று அங்காளபரமேஸ்வரியை வணங்கினால் அதிக பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிலையில் உற்சவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டால் பக்தர்களுக்கான அடிப்படை வசதியை தற்காலிகமாக  ஏற்பாடு செய்யலாம். அதோடு, நீதிமன்ற தடையை விலக்கவும் முயற்சிக்கலாம்” என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.