சென்னை; தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர்  ஸ்டாலின் கூறினார். மேலும் விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின்,  சாதிய ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக   உரையாற்றி வருகிறார்.  அப்போது, சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,   “சமூகங்களின் பெயர்களில் ‘ன்’ விகுதியை நீக்கி ‘ர்’ என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. உலகம் அறிவு மயம் ஆகிறது, ஆனால் அன்பு மயம் ஆவது தடுக்கப்படுகிறது என்றார்.  அனைத்து விதமான ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

‘சீர்திருத்தப் பரப்புரையும், குற்றத்திற்கான தண்டையும் வாளும், கேடயமுமாக முன்னெடுப்பட வேண்டும். சீர்திருத்தச் சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைக்கப்பட்டது. இடைக் காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது. சாதி வேற்றுமையானது. வேற்றுமை விதைக்கப்பட்டதும், ஒற்றுமைக்கான குரல்கள் தமிழ் மண்ணில் உரக்க எழுந்ததை காண்கிறோம்.  அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கி இருக்கிறோம். சமநீதி, சமூக நீதி உறுதிமொழி எடுத்தோம். பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூகநீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம். ஆனால் சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது.

ஆணவப் படுகொலைக்கு சாதி மட்டும் காரணம் இல்லை.. எதற்காக நடந்தாலும் கொலை, கொலைதான். ஆணவப் படுகொலையை தடுக்க வேண்டும் என்று சபையில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆணவப் படுகொலையில் ஈடுபடுபவர்கள் எதன் பொருட்டும் தப்பிவிடக் கூடாது என்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறிய வள்ளுவர் பிறந்த மண் இது. பல சீர்திருத்த கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்துள்ளன. கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள் அனைவருக்கும் தருவதற்காகவே இந்த இயக்கங்கள் உருவாகின. சாதிக்கு மதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கங்கள் வழங்கின. இனமும் மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியதே நமது சாதனை.

அதேபோல் ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.   ” இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும் என்று தெரிவித்துள்ளார்.