புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கை வழியாக சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கிறது, அதை ஏற்க முடியாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: புதிய கல்விக் கொள்கையில் மத சாயல் இருக்கிறது. முக்கியமாக சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என அனைவரையும் யாராக இருந்தாலும் சமமாக பாவிக்கும் ஒரு மாநிலம் புதுச்சேரி.
இந் நிலையில் ஒரு மதத்தை மட்டும் திணிக்கும் இந்த புதிய கல்விக் கொள்கை இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய கல்விக் கொள்கை பல குழப்பங்களை மக்களிடம் ஏற்படுத்துகிறது. மாற்றங்களை கொண்டு வருவதாக சொல்கின்றனர்.
ஆனால், வேத பாடசாலை திட்டத்தையும், குலக் கல்வியைக் கொண்டு வரவும் விரும்புகின்றனர். புதிய கல்விக் கொள்கைது வேலைவாய்ப்பை நோக்கி செல்கிறது என்கின்றனர். ஆனால் படித்து பார்த்தால் மக்களுக்கு பயன் தரும் திட்டமாக இல்லை என்பது தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.