டெல்லி: மத்தியஅரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை 2020, 17 உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்மொழி பெயர்ப்பு புறக்கணிக்கப்பட்டு உள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை கடந்த ஆண்டு (2020) வெளியானது. இதுதொடர்பாக மத்தியஅரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு 2019ம் ஆண்டு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு (2020) ஜூலை 29-ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.
அதன்படி, 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, மற்றும் 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காக பாடமுறை மாற்றப்படும்.
மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். 6-ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாநில மொழிகளில் வெளியிடப்பபடும் என மத்தியஅரசு அறிவித்தது.
அதன்படி, தற்போது மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தேசிய கல்விக்கொள்ளை வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,
கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் மட்டும் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால், தமிழில் வெளியாகவில்லை.
இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.