ஷில்லாங்

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விவசாயிகள் போராட்டத்தில் தவறான பாதையில் செல்வதாக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

பாஜக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது.  இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் கிட்டத்தட்ட 5 மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  இந்த விவகாரம் குறித்துப் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தும் இதுவரை முடிவுக்கு வரவில்லை.  நாளுக்கு நாள் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் சோம்பிர் சங்வான் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார்.  தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அவர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.   அவர் மேகாலயா ஆளுநரான சத்யபால் மாலிக் குக்கு விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு மொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதி உள்ளார்.

அதற்குப் பதில் அளித்த சத்யபால் மாலிக், ” விவசாயப் போராட்டம் குறித்துப் பேச நான் பிரதமர் மோடி மற்றும்  உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தேன்.   அப்போது விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு நீதி வழங்குமாறு யோசனை தெரிவித்தேன்.   விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறம் தள்ள முடியாது எனவும் கூறினேன்.  அப்போது மோடியும் அமித்ஷாவும் தவறான பாதையில் செல்வதை அவர்களிடமே சொல்ல முயன்றேன்.

மத்திய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்கும் வரை நான் எனது முயற்சிகளைச் செய்வேன்.   நான் எப்போதும் உங்களுடைய மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிராகரிக்க மாட்டேன்.  நான் மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் டில்லி செல்கிறேன்.  அப்போது விவசாயிகள் சார்பாக அனைத்து தலைவர்களையும் சந்தித்து இது குறித்துப் பேச உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.