சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதால்,  மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால், மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

குறைந்த காற்றழுத்தம் உருவாகி வருவதால்,  வரும் 9-ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில்  மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் லத்த காற்று வீசக்கூடும், இதனால்  வரும் 9-ம் தேதி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு  மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.