சென்னை:
தமிழக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதன்படி புதிய பாடத்திட்டத்தின்படி வண்ணமயமான பாட நூல்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி “தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, கல்வி முறையை மேம்படுத்த முனைவர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ‘கலைத்திட்ட வடிவமைப்புக் குழு’ உருவாக்கப்பட்டு, அவர்களுடன் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 நபர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அதையடுத்து அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவித்துள்ளபடி 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைத்து வகுப்பு களுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டங்களை படிப்படியாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இதன் முதல் வரும் கல்வியாண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு வரும் ஆண்டு புதிய பாடத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி, புதிய பாடத்திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த 4 வகுப்புகளுக்கும் சேர்த்து 1கோடியே 70 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த புத்தகங்களில், பாடத்திட்டம் தொடர் பான கூடுதல் தகவல்கள் அறிந்துகொள்ளும் வகையில், “கியூ.ஆர். கோடு” எனப்படும் டிஜிட்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வண்ண வண்ண படங்களுடன் மாணவ மாணவிகளின் கண்ணைக்கவரும் வகையில் புத்தகங்கள் தயாராகி வருவதாகவும், இந்த புத்தகங்களில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களும் இடம்பெறும் என்றும் கூறி உள்ளனர்.
தற்போது புத்தகங்களை அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மே மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகி, தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாடு பாட நூல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.