சென்னை:

மிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும்  விமான சேவை தொடங்கியது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி பகுதிக்கு இன்று  காலை 8.45 மணியளவில் தமிழகத்தில் இருந்து இலங்கையின் 3வது பெரிய விமான நிலையமான ஜாஃப்னா விமான நிலையத்தில் முதல்  விமான சேவையை வெற்றிகரமாக தொடங்கியது.

வாரத்துக்கு மூன்று விமானங்கள் சென்னை – யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள  அல்லையன்ஸ் ஏர் நிறுவனம், நேற்று  சோதனை ஓட்டத்தை நடத்தியது.  இலங்கைக்கு கிளம்பிய அந்த விமானத்தில், ஏர் இந்தியா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 16 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில், இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானத்தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்புவிற்கு விமானப் போக்குவரத்து இருந்து வந்தது.

1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னர் தற்போது இந்திய உதவியுடன் இது சர்வதேச பயணிகள் விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்த விமான நிலையத்தில் இருந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

ஜாஃப்னா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் வீடியோ…

https://youtu.be/YQyhG8Hiw_Q

இதன் முதல் கட்டமாக சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் விமானம் சோதனை ஓட்டமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் வந்திறங்கியது. இன்று முதல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக செயல்படுகிறது.

முன்னதாக பலாலி விமான நிலையம் திறப்பு விழாவில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.