சென்னை
திரு ஆர் சங்கர்நாராயண் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நபார்டு வங்கியின் புதிய தலைமை பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
01 ஜூலை 2023 முதல் தமிழ்நாடு மண்டல அலுவலகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளராகத் திரு ஆர் சங்கர்நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த இவர், மேம்பாட்டு வங்கியியலில் 35 வருட அனுபவம் பெற்றவர். இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில், வணிகவியலில் முதுகலைப்பட்டம் மற்றும் இந்திய வங்கியாளர்கள் நிறுவனத்தின் சார்ட்டர்ட் அசோசியேட் பட்டமும் பெற்றவர்.
கேரள நபார்டு வங்கியில் தனது சேவையைத் தொடங்கிய இவர், ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் நபார்டு வங்கியின் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவ்வங்கியில், உழவர் உற்பத்தியாளர் சங்கம், விவசாயம் மற்றும் விவசாயம் சாரா துறைகளின் மேம்பாடு, வங்கி மேற்பார்வை, கிராமப்புற உட்கட்டமைப்பு, மறு நிதியளிப்பு, கூட்டுறவு நிறுவனங்களின் நிறுவன மேம்பாடு போன்ற பலதரப்பட்ட இலாகாக்களைக் கையாண்டுள்ளார்.
மதுரையில் உள்ள நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளராகவும் பணியாற்றியுள்ள திரு ஆர் சங்கர்நாராயண், அம்மாவட்டத்தில் சுங்கடி சேலைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், குறு நிறுவனங்கள், நீர்வடிப் பகுதிகள் போன்றவற்றின் வளர்ச்சிக்கான பல முயற்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தனது பதவிக்காலத்தில், கிராமப்புற உட்கட்டமைப்பு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்களைக் கணினிமயமாக்கல் மற்றும் முழுமையான வளர்ச்சிக்காக விவசாயக் கடன்களை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போவதாக நம்பிக்கையளித்துள்ளார்.