டில்லி

ரொக்க பரிவர்த்தனைக்கு மீண்டும் மத்திய அரசு வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வங்கி ரொக்க பரிவர்த்தனை வரியை அறிமுகம் செய்தார்.   அதன்படி வங்கியில் இருந்து ரூ. 10,000 க்கு மேல் பணம் எடுக்கும் போது 0.1% வரி விதிக்கப்பட்டது.  அதன்பிறகு அது ரூ. 25,000 என மாற்றப்பட்டது.   அதன் பிறகு 2009 ஆம் வருடம் அந்த வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

தற்போது பதவி ஏற்க உள்ள புதிய அரசு முந்தைய வங்கி ரொக்க பரிவர்த்தனை வரியை மீண்டும் கொண்டு வர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    இது  குறித்த ஆலோசனை நிதிநிலை அறிக்கை கூட்டத்தின் போதே நடத்தப்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருப்புப் பண நடமாட்டத்தை பொதுவாக ரொக்க பரிவர்த்தனை மூலமே நடைபெறுவதால் அதை கட்டுப்படுத்த இவ்வாறு வரி விதிக்க அரசு உத்தேசித்துளதாக கூறப்படுகிறது.    அத்துடன் கடந்த 1985 ஆம் வருடம் ரத்து செய்யப்பட்ட எஸ்டேட் வரியை மீண்டும் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரி விதிப்புக்குள் ரூ.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள் மட்டும் கொண்டு வரப்படும் எனவும் கூராப்படுகிறது.   ஆனால் மத்திய நிதித்துறை இந்த தகவல்கள் குறித்து எவ்வித செய்தியும் இதுவரை அளிக்கவில்லை.    புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் வரை எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.