புதுடெல்லி: முதுமை காலத்தில் பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைப்பதற்கு வழிவகை செய்யும் சட்டதிருத்தத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போது நடைமுறையிலிருக்கும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007ன் படி, வயதான பெற்றோர்களை கைவிட்டால் 3 மாதங்கள் மட்டுமே சிறைதண்டனை கிடைக்கும். எனவே, இவற்றில் திருத்தம் கொண்டுவர மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்தது.
முந்தைய சட்ட நடைமுறையின்படி, மகன்கள், மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோர் மட்டுமே தண்டனை வரம்புக்குள் வருவார்கள். ஆனால், புதிய திருத்தத்தில் தத்துப் பிள்ளைகள், மருமகன்கள் மற்றும் மருமகள்களையும் தண்டனை வரம்புக்குள் கொண்டுவர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையாக வழங்கும் ரூ.10000 என்பதை, பிள்ளைகள் அதிகம் சம்பாதிக்கும்பட்சத்தில் கூடுதலாக வழங்கும் வகையிலும் திருத்தம் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.