சென்னை: ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,  பத்தாண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், ஓசூரில் புதிய விமான  நிலையம், சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டிட்கோவுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதுபோல, சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலையம் சமர்ப்பித்துள்ளது என்றும், விமான போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை என தொழிற்சாலை மானிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பத்தாண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்துள்ளது இந்த அரசு, 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ.65,375 கோடி முதலீட்டில் போடப்பட்டு உள்ளது என்றும், தொழிற்துறை வேகமாக முன்னேறி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.