சென்னை: கோயில் திருவிழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சமீபகாலமாக தமிழ்நாட்டின் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகிறது. முன்பு இது ரெக்கார்ட் டான்ஸ் என்ற பெயரில் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆபாசம் அதிகரித்த நிலையில், ரெக்கார்டு டான்ஸ் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நவீன வடிவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில், ஆபாச டான்ஸ்கள், ஆபான அங்க அசைவுகளும், வார்த்தைகளும் அரங்கேறி வருகிறது. ஆடல்பாடல் நிகழ்ச்சியின் போது உற்சாக மிகுதியில் இளைஞர்கள் தன்னை மறந்து மேடையேறி நடன குழுவினருடன் சேர்ந்து ஆடுவதும், தகாத செயல்களில் ஈடுபடும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் மோதல்களும் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருந்தால் நிகழ்ச்சியை போலீஸ் உடனே நிறுத்தலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.