சென்னை: எத்தனை தடை வந்தாலும் படிப்பை மட்டும் விட்டு விடக்கூடாது என யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில்  கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவச்சந்திரன் என்பவர் தமிழகத்தில் முதலிடமும் இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார்.  யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்தியது.   தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,   “கடந்த காலங்களில் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் பலன் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தப் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறவே ‘நான் முதல்வன்’ திட்டம் இருக்கிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது.

அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கென அறிவு முகம் இருக்கிறது. மாணவர்கள் மீதும், திட்டம் மீதும் வைத்திருந்த நம்பிக்கை பலன் அளித்துள்ளது. . தமிழக அதிகாரிகளுக்கு தனி மதிப்பு உள்ளது. கடமையை நிறைவேற்றி ஒரு தந்தைக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்.

இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்று நீங்க பணியாற்றினாலும், சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களின் உயர்வுக்காகப் பாடுபடுங்கள். உங்களது சிந்தனையால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டால் மக்களின் மக்களின் மனதில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும்”

இவ்வாறு பேசினார்.

இதைத்தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் உதயநிதி,   “தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை பெற்றவர்கள். 17 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றவர்கள். முதல் நிலை தேர்வுக்கு தயாராவோருக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.7000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முதன்மை தேர்வுக்கு தயாராவோருக்கு மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது” என துணை முதல்வர் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.