எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாள் குறித்து நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு
குறையே வைக்காத குருநாதன், சுஜாதா….
திரும்பிப்பார்த்தால் எவ்வளவு  அருமையான நினைவுகள்…
லெண்டிங் லைப்ரரிக்கு போனால்,இரண்டே ஷெல்ப் பக்கம்தான் பார்வை ஓடும்.
ஒன்று சுஜாதா, இன்னொன்று எண்டமுரி வீரேந்திரநாத்., நாம் தேடும் புத்தகங்கள் அங்கே இருக்காது. யாராவது அம்மணிகள் நமக்கு முன்பே எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள்.
படித்தபடியே தூங்கிவிட்ட அவர்களின் மார்பில் விரிந்தபடியே புதைந்ததுபோய் அந்த புத்தகங்கள் பெற்ற தரிசனங்களை நினைத்துப்பார்த்தால், தங்கமும் சந்தனமும் கலந்த புதுவிதமான மணத்தை மனதளவில் வாரியடிக்கும்.
பத்தாவது தமிழ் மீடியத்தோடு கேட் போடப்பட்டுவிட்டது நம்முடைய படிப்பு. என்ன டக்கர் அடித்தும்ம் அதற்கு மேல் நம்மால் போகவே முடியவில்லை.
விசாலமான வாசிப்புக்கு அதிகம் ரோடு போட்டவர்கள் என்ற பட்டியலில், சுஜாதாவின் புத்தகங்களுக்கும் அவரின் உள்ளூர்வாசிகளுக்கும் பங்குண்டு.
லெண்டிங் லைப்ரரி எனப்படும் வாடகையில் நூல் நிலையம் அப்போது ஒருவகையில் ஜாலியான போர்க்களமும் கூட..
இன்ன தேதியில் இன்ன நேரத்தில் இந்தப் பெண் புத்தகம் எடுக்க வருவார் என்பது அத்துப்படி ஆகிறது என்றால் எந்த அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கவேண்டும்?
நாம் கேட்கிறோம் என்பதற்காகவே, குறிப்பிட்ட தினத்தன்று புத்தகத்தை கொண்டுவராமல், ரெனிவலுக்கு பணம்கட்டிவிட்டு சாவுடா மகனே என்று பார்வையாலே வெறுப்பேற்றி சென்ற அம்மணிகளெல்லாம் எவ்வளவு அழகு ரகங்கள்.
ஆனாலும் வழிதல் பாணிக்கு போகாமல் பளிச் பளிச் என, சந்தர்ப்பங்களை எதிர்கொள்வதில் சுஜாதாவின் எழுத்துக்கள் தூண்டுதலாகவே இருந்தன.
நம்மிடம் நெருக்கமாகவே வரமுடியாத நிலையில் இருப்பவளிடம் நாம் ஏன் வலியவலியப்போய் வழியவேண்டும்? லாபம் திரும்பாத இடத்திற்கு எதற்கு முதல் போடவேண்டும்?
எக்ஸ்ட்ரா லக்கேஜ் தருணங்களை உதறினாலே வாழ்க்கையில் சலிப்புகள் போய் சுவாரஸ்ங்கள் கூடும் என்று கற்றுத்தந்தன சுஜாதாவின் எழுத்துக்கள்.
ஓ, அடடே, என்னே இதுபோன்ற வார்த்தைகளில் கவிதைகள் ஆரம்பித்தால், தூக்கிகடாசிவிட்டு வேறு வேலையை பாருங்கள் என்பார்.
புதுப்பித்து புதுப்பித்து வாழ்தல் பாணியே, அவர் எழுத்து.  படியில் இறங்கினான் என்பதையே இ, ற, ங், கி,னா,ன் என்பதில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு எழுத்தை மட்டுமே போட்டு ஆறுவரிகளில் அழகாக படிக்கட்டு பத்தியை அமைத்த புதுமையான எழுத்தோவியன் சுஜாதா
..
வெளிப்படையாக சொன்னால், எண்டமுரி வீரேந்திர நாத், சோ, இவர்களையும் மிஞ்சி சுஜாதாதான் நாம் புத்தகம் வாசித்த காலங்களில் பெரும்பகுதியை ஆக்கிரமித்தவர்,.  டோலியின் டோலிகளை அட்ராக் பண்ணி பிலிம் காட்ட விளையாட்டாக மில்ஸ்அன் பூன், ஜேம்ஸ் ஹாட்லி சேசில் ஆரம்பித்து, பெர்ட்டன் ரஸ்ஸலின் மேரேஜ் அண்ட் மாரல்ஸ் ஏவ்லாக் எல்லீஸ்சின் சைக்காலஜி ஆப் செக்ஸ். போன்றவற்றை பாவனைக்காக படிக்கப்போனோம்..
கடைசியில் படிக்க படிக்க உண்மையிலேயே மிரண்டுபோனோம்..
அப்புறம் சிக்மண்ட் பிராய்டோட இத்யாதி இத்யாதின்னு புரண்டு வளர்த்தோம்..இத பார்றா என்னம்மா ரீல் வுடறான்னு நீங்க கமெண்ட் போடலாம்.. இப்பவே காதுல கேக்குது..
இதெல்லாம், புஸ்தகங்களை படிக்கிற வழக்கத்தை அடியோடு கைவிட்டு, ‘’வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள்’’ என நிர்மலா பெரியசாமி வகையறாக்களோடு சன்டிவி செய்தி என்ற நியூஸ் மெண்டாலிட்டியில சிக்கி சின்னா பின்னமாகிறதுக்கு முன்னாடி நடந்த துன்பியல் சம்பவங்கள்..
இன்ரஸ்ட்டிங்கான சமாச்சாரம் என்னன்னா, படி படின்னு அப்பா சொன்னாலும் சரி, ஆனானப்பட்ட வாத்தியாரே சொன்னாலும் சரி, அதெல்லாம் இன்னொருத்தரு சொல்லியா நாம செய்யறது? நோ.. பிகாஸ் ஈகோ பிராப்ளம்.. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு பிளாஷ்பேக்
சொந்தமா படிக்க ஆரம்பிச்சி,, அதுவும் என்னா வேகத்துல போவும் தெரியுமா? வேறன்ன, பெட்டிக் கடைகளில் திருட்டுத்தனமாய் வாங்கிய அல்லது ஆட்டைய போட்ட சிலிர்ப்பிலங்கியங்கள்தான்..
”என் பெயர் சா. வயது 14. பேப்பர் போடும் வேலை பார்த்த நான், ஒரு சண்டே மதியானம், ஒரு வீட்டுக்கு போய் சார் என்று குரல் கொடுத்தேன்,. சாருக்கு பதிலாய் வீட்டம்மா அப்படியே பாத்ரூமில் இருந்து போர்த்தியும் போர்த்தாமாதிரியும் ஏடாகூடமான கோலத்தில் வந்து, என்ன தம்பி என்றார். நான் எச்சிலை கூட்டி முழுங்க ஆரம்பித்தேன்…. ‘
சிலிர்ப் பிலங்கியங்களில் கையாளப்பட்ட மொழி மற்றும் நடை ஓட்டங்களும் வாலிப பருவத்தில் அனைவரையும் புரட்டி எடுத்தது போல நம்மையும் கொஞ்சகாலம் புரட்டி எடுத்தது. ஆனால் கான்வெண்டுகளில், ஹெரால்ட் ராபின்சனை ரெண்டு மூன்றாக கட் பண்ணி சேர் செய்து சப்ஜெக்ட் புக்கு களில் வைத்து கிளாசிலேயே படிக்கும் டெரர் கேர்ள்ஸ் பற்றி கேள்விப்பட்ட போது. நாமெல்லாம் ஜுஜுபி என தலை கவிழ்ந்துபோனோம்..
அம்புலிமாமாக்களையும் சிலிர்ப்பியங்களையும் தாண்டி புத்தக வாசிப்பில் ஆர்வமே இல்லாத நம்மை கொஞ்ச மாவது படிக்க பழகுடா பக்கி என்று இழுத்துப்போட்ட . எழுத்துலகின் வாத்தியார் சுஜாதாவிடம் போவோம்..
அல்ஜீப்ரா முதல் ஆழ்வார் பாசுரங்கள்வரை அனைத்தையும் எளிமையில் எழுத்தில் கொடுத்ததில் தமிழ் எழுத்துலகின் நவீன பீஷ்மர் வெர்ஷன்தான் அவர்.
நாவல்களில் அவர் எழுத்து நடை பிரவாகம் எடுத்து அப்படி ஓடும். என்ன, சில பக்கங்களில் மட்டும் மறுபடியும் ரிபீட் மோடில் அங்கேயே இருந்து தொலைக்கவேண்டி வரும்.. கிளம்பவே மனசு வராது..அவ்ளோ குசும்பான வர்ணனைகள்..
கயல் என்று பேர் சொல்லும் பெண்ணிடம், இந்த பெயர் கண்ணுக்கு மட்டுமா, இல்லை மொத்ததுக்கும் சேர்த்தா என்று கேட்பார்.. அதன் பின்னணியில். அவளின் ஒவ்வொரு அங்கத்திற்கு என்னன்ன பொருத்தமான பெயர்கள் இருக்கட்டும் என்று வாசகனே யோசித்து இன்ப வேதனையில் சாகட்டும் என்ற வரம் இருக்கும்.
அன்யோன்யமான தருணத்தில், “ஏங்க உங்க சம்பளம் எவ்ளோ? என கேட்கும் மனைவியிடம், தொகையை இரண்டாக பிரித்து இதுக்கு இவ்ளோ,அதுக்கு அவ்ளோ என்று சொல்லி அசால்ட்டாக கடந்துபோய்விடுவார்.. படிக்கும் நாம் தான், அங்கேயே குந்திகிட்டிருப்போம்.
இப்படி ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும்போதும் பொங்கல் சாப்பிடுகிறவனுக்கு மாறிமாறி கிடைக் கும் கார மிளகும் வறுத்த முந்திரியுமாய் அம்சோ அம்சங்கள் என வந்தபடியே இருக்கும்.
30 வருடம் அட்வான்ஸ் மோடில் வாழ்ந்துகொண்டி ருந்த எழுத்தாளரை எழுத்துலகமும் பத்திரிகை உலகமும் உச்சத்தில் வைத்து கொண்டாடினாலும், ஆரம்பத்தில் சினிமா உலகம் அவரை அழவைத்தே பார்த்தது..
புளுஃபிலிம் எடுத்து விற்கும் ஒருவனை பற்றிய கதையை 1977ல் இவர் சொன்னபோது பலரும் நம்பவில்லை.. இப்படியெல்லாமா நடக்கும் என்ற அதிர்ந்துபோனார்கள். அந்த படம், ரஜினி நடித்த காயத்ரி..
பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படத்தில் டுடே.. பிளைட்.. டிலே.. வொய்.. என்று ஏர்போட்டில் இங்கிலீசில் ரஜினி உதார்விட்டபடியே கேட்கும் அந்த சீன்..இப்படி எத்தனையோ..நச் ரகங்கள்
கணேஷ் – சிஷ்யன் வசந்த்.. எப்பேர்பட்ட இன்டெக் லெச்சுவல் சில்பான்ஜி கேரக்டர் என்பது உலக்குக்கே தெரியும்., அந்த வசந்த்தாக, நடிகர் திடீர் கன்னையா ( ஆடு திருடுபோகல திருடுபோனதா கனவு என்று வடிவேலு பட பஞ்சாயத்தில் புலம்புவாரே அவர்) ப்ரியா பட கணேஷ் ரஜினிக்கு. இப்படியொரு வசந்த்தா என்று நொந்துபோய்விட்டார் மனுஷர்.
இருந்தாலும் விடாமல் கரையெல்லாம் செண்பகப் பூவை படமாக்குகிறோம் என்று இவரை மீண்டும் அழவைத்தார்கள்.
.
நாவல்கள் நாசமாவதை பார்த்து தலையில் அடித்துகொண்டு, இனிமேல் என் பக்கம் சினிமாகாரங்க வராதீங்கப்பா என கையெடுத்து கும்பிட்டு கதறிய மத்திய அரசு விஞ்ஞானிதான் சுஜாதா அவர்கள்..
ரொம்ப நாள்கழித்து கமலுக்காக விக்ரம் படத்திற்கு எழுத சம்மதித்தார். விக்ரமில்தான் எத்தனையெத் தனை நச் வசனங்கள்.. நீண்டு இடைவெளி என்பதால் வசனங்களில் துவம்சம் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு கப்பற்படை தளபதியை பார்த்து ”என்ன… கப்பலு சௌக்கியமா..” ராக்கெட்டா ஓ..சிவகாசி சமாச்சாரம் இங்குட்டு பத்தவெச்சா அங்கிட்டுபோய் வெடிக்குமே அதுவா?”
”எந்த விலைமகள் மகன் ராக்கெட்டை தள்ளிக்கிட்டு போனான்.. ”
”ராக்கெட்டை சீக்கிரம் கண்டுபிடிங்கய்யா வெடிச்சிடபோவுது..ஆம்பூர்ல கரும்பு போட்டிருக்கேன்” – ஒரு மங்குணி அமைச்சராய்  நடிகர் வி கே ராமசாமி பேசவைத்து, டுபாக்கூர் அரசியல் வாதிகளை அப்படியே கண்முன்னே நிறுத்திய இவரது எழுத்துக்கள்…எழுத்தின் வலிமைதான் என்ன?
அதே விக்ரம் படத்தில் ஆண்கள் செய்யும் எல்லா வேலையையும் பெண்கள் செய்வோம் என்று சொல்லும் இளம் கம்ப்யூட்டர் அழகான ராட்சசியிடம், நான் வேர்த்து கொட்டிச்சின்னா பனியனை கழட்டிட்டு மொட்டை மாடியில அலைவேன். நீ எப்படி? என்று பாத்திரத்தின் ஆணாதிக்க மனோபாவத்தை நிலை நாட்டிய அந்த தொணி..
ஆனால் படமாவதற்கு முன் நாவலாக வந்தபோது, இதே சீனை இன்னும் ஸ்ட்ராங் போர்னாவாக, அதேநேரத்தில், மிகவும் நாசூக்காக சொன்னவர்.
கமல் இவருக்கு விரித்த ரத்தின கம்பளத்தை அழகாய் புரிந்துகொண்டு அதில் ராஜபாட்டை போட்டவர்கள் இயக்குநர்கள் மணிரத்தினமும் ஷங்கரும்.
ரோஜா, இந்தியன், அன்னியன், சிவாஜி, தசாவதாரம், எந்திரன் என தமிழ்திரையுலகின் பிரமாண்ட சினிமாக்கள் இவரின் எழுத்துக்களால் பிரசவமானவை என்பது ஊரறிந்த விஷயம்..
அதிலும் ஷங்கர் படங்களை சுஜாதாவுக்கு முன், சுஜாதாவுக்கு பின் என பிரிக்கும் அளவுக்கு பெரிய வித்தியாசம் தெரியும்..
“வெளிநாட்லயெல்லாம் கடமையை மீறத்தாண்டா லஞ்சம், இங்கே கடமையை செய்யவே லஞ்சம்..” இந்தியன் பட வசனம், என்ன ஒரு தாக்குதல்? © Kanchi Ezhumalai Venkatesan
100 கோடி பேரின் ஆவேசம் ஒன்று திரண்டால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதானே இந்த வசனம்?.
விஞ்ஞானம், வரலாறு, ஆன்மீகம், அரசியல், குடும்ப உறவுகள், கல்வி என எல்லா விஷயத்திலும் ப்பூ இவ்ளோதான்யா என் பட்பட்டென்று முடிச்சுகளை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அவிழ்த்து போடுவதில் சுஜாதா கில்லாடி..
சகல அம்சங்களையும் ஒரு புத்கத்தில் கலந்து கட்டி அடிப்பதில் ஈடு இணையில்லாதா ஜாம்பவான்..
மகளை செல்லமாக வளர்க்கலாமா என்ற கேள்விக்கு, வளருங்கள் பின்னாளில் ரிஜிஸ்டர் ஆபிசிலிருந்து தகவல் வரும் என்று பட்டென உடைத்த நம்மைப்போன்ற தலைசிறந்த ஆணாதிக்கவாதி..
பத்திரிகைகளில் வரும் செய்திகளையெல்லாம் அப்படியே உண்மை என்று நம்புகிற அளவுக்கு அவன் ஒரு அப்பாவி என வர்ணிப்பார்..
மக்களின் முட்டாள் தனத்தையும் பேப்பர்களின் கதைவிடும் தன்மையையும் ஒரே நேரத்தில் குத்துவிடுவார்.
சுஜாதாவின் எழுத்துக்களை கொஞ்சமாவது படிக்காமல் போகிறீர்கள் என்றால் என்றால், வாழ்க் கையின் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயத்தை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்..
சுஜாதாவுக்கு நமக்கும் பொருந்திப் போகும் ஒரு இடம் உண்டு.
எவ்வளவு விஞ்ஞானம் பேசினாலும், உலகில் மரணம் மட்டுமே நிரந்தரம்,. மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது என்கிற மாயத்தை அறிய மரணத்தையே விலை கொடுக்க வேண்டும் என்பதுதான் அது.
இரண்டே நாளில் நமக்கு பைபாஸ் சர்ஜரி செய்தால்தான் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் நிலை என்று வந்தபோது, இதெல்லாம் ஒரு பெரிய சமாச்சாரமா என்று சுயமாக தீர்மானித்து முடிவெடுக்கும் அளவுக்கு முன்கூட்டியே எழுத்துக்களில் விவரித்து தைரியம் தந்தவர்.
ஈடு இணையற்ற சுஜாதா என்கிற ஸ்ரீரங்கத்து ரங்கராஜனின் 14 வது நினைவு நாள் இன்று.