ஒமிக்ரான் பரவல் குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவிக்கும் முன்னரே நெதர்லாந்து நாட்டில் பரவிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையம் வந்த பயணிகளிடம் ஒமிக்ரான் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு 11 நாட்கள் முன்பாகவே ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

நவம்பர் 19 மற்றும் 23 ம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளில் ஒமிக்ரான் வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டதால் உலக நாடுகளை விழிப்புடன் இருக்க உலக சுகாதார அமைப்பு கோரிக்கை வைக்கும் முன்பே ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

முந்தைய நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்கள் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றிருக்கிறார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறிய அதிகாரிகள், ஓமிக்ரான் நோய்த்தொற்றுகள் குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் சுகாதார சேவைகள் தொடர்புத் தடமறியத் தொடங்கியுள்ளன என்றும் கூறினர்.

நெதர்லாந்தில் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பரவல் குறித்து தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்த அவர்கள், முந்தைய கோவிட் சோதனை முடிவுகளிலிருந்து கூடுதல் மாதிரிகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.