பழனி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென பழனி முருகன் கோவிலுக்கு சென்று, மொட்டை போட்டு முடிக்காணிக்கை செலுத்தியுள்ளார். அவரது மொட்டை சசிகலா விடுதலைக்கான நேர்த்தி கடன் என சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சராக இருந்து வருபவர் ஆர்.பி.உதயகுமார். புயல் போன்ற பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றினார். மதுரையின் வளர்ச்சி முக்கியமா? உங்களது அமைச்சர் பதவி முக்கியமா? என்றால், தென் தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம் எனக் கூறுவேன்” எனதெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தென் தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தவர்.
தற்போது சசிகலா சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி சென்னைக்கு திரும்பி உள்ள நிலையில், அவருக்கு பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமான அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. சசிகலாவும் சில அமைச்சர்களுடன் போனில் உரையாடியாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அமைச்சர் ஆர்.டி.உதயகுமார் திடீரென நேற்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் முடி காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து படிப்பாதை வழியாக நடந்தே கோயிலுக்கு சென்றார். கோவிலில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர், திருஆவினன்குடி கோயில் மற்றும் பாத விநாயகர் கோயில்களில் தரிசனம் செய்தார்.
அமைச்சர் மொட்டை போட்டுள்ளதை அறிந்த நிருபர்கள், அவரை மடக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ‘‘சசிகலா வருகையால் அதிமுகவில் பிளவு ஏற்படுமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக பதில் தெரிவிக்க மறுத்த அமைச்சர் புன்னகையை பதிலாக தெரிவித்தார்.
மேலும், மொட்டை போட்டது யாருக்காக, என்ன வேண்டுதல் என்ற செய்தியளார்களின் கேள்விக்கும் பதில் தெரிவிக்காமல், சிரித்தபடி சென்றுவிட்டார். சசிகலா குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றதும், சசிகலா வருகையை தொடர்ந்து முடி காணிக்கை செலுத்தி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலாவின் ஆதரவாளராக கருதப்படும் ஆர்.பி.உதயகுமார், , அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் தினகரன் என தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2017ம் ஆண்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அப்போது, சசிகலா முதல்வராக பதவி ஏற்கவேண்டும் என முதல் ஆளாக குரல் கொடுத்தவர் அமைச்சர் உதயகுமார்.
தற்போது, சசிகலா விடுதலையாகி தமிழகம் வந்துள்ள நேரத்தில்,அமைச்சர் குடும்பத்தோடு பழனி சென்று மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செய்துள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.