காத்மண்டு: சீன நாட்டு மொழியான மாண்டரின் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை தானே வழங்குவதாக சீன அரசாங்கம் அறிவித்ததையடுத்து, நேபாளம் முழுவதும் பரவியுள்ள பல தனியார் பள்ளிகளில், சீன மொழி பயில்வது மாணாக்கர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக, சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சீனா அமைத்து வரும் சீனா – பாகிஸ்தான் பொருளாதார பாதை என்ற சாலை திட்டத்தின் விளைவாக, நேபாள நாட்டிலும் சீனாவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. இதனடிப்படையில்தான் இந்த மொழிக் கொள்கையும். ஆனால், இந்த சாலைத் திட்டத்தை இந்தியா எதிர்த்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன மொழியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் முழு ஊதியத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக சீன அரசு அறிவித்திருப்பது பல நேபாள தனியார் பள்ளிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. எனவே, பல பள்ளிகள் மாண்டரின் கற்பதை கட்டாயமாக்கியுள்ளன.

ஆனால், நேபாள நாட்டு பள்ளிப் பாடத்திட்ட விதிமுறைகளின்படி, பள்ளிகளின் இந்த செயல்பாடு தவறு என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

நேபாள பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தரலாம். ஆனால், எந்த மொழியையும் கட்டாயமாக்குவது தவறு என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.