டாக்கா

வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்க தொகை அளிக்க உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

வங்கதேச மக்களில்  பலர் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர்.  அவர்கள் கொண்டு வரும் பணத்தின் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி அதிகம் கிடைத்து வருகிறது.  இந்நாட்டுக்கு கடந்த 2005-06 ஆம் வருடத்தில் 450 கோடி அமெரிக்க டாலர்கள் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.  அது 2018 ஆம் வருடம் 1500 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் பலர் இந்த பணத்தை உண்டி உள்ளிட்ட சட்டவிரோதமாக மாற்றி விடுவதால் அந்நிய செலாவணியை அரசு இழந்து விடுகிறது.   இதை ஒட்டி வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு சில சலுகைகள் அளிக்க வங்கதேச அரசு முடிவு செய்தது.   அந்நாட்டில் தற்போது சமர்ப்பிக்கப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் இந்த சலுகைகள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து வங்க தேச நிதி அமைச்சர் முஸ்தபா கமால் வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்கத்தொகை அளிக்க உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் மக்கள் சட்டவிரோதமாக அன்னிய செலாவணியை மாற்றுவது பெருமளவில் குறையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.