காத்மாண்டு: இந்திய-நேபாள எல்லையில் உள்ள இந்திய விவசாயிகள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

பீகாரின் சீதாமாரி மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லைக்கு அருகே நேபாள காவல்துறை கண்மூடித்தனமாக இந்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய நாட்டு விவசாயி ஒருவர் பலியாகி உள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்தியரின் வயது 25 என்றும், அவரது பெயர் நாகேஸ்வர் ராய் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஜனன் நகர் டோலே லல்பூண்டியில் வசிப்பவர் ஆவார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உமேஷ் ராம் மற்றும் உதய் தாக்கூர் என அடையாளம் காணப்பட்டது.

இவர்கள் இருவரின் நிலைமையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை சீமா பால் ஐ.ஜி உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவம் உள்ளூர் மக்களுக்கும் நேபாளத்தின் ஆயுத போலீஸ் படையான ஏபிஎப் இடையே நடந்தது என்று கூறினார்.

இந்தியாவின் பல பகுதிகளை அதன் பிரதேசமாகக் காட்டும் புதிய அரசியல் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. அதன் காரணமாக இரு நாடுகள் இடையே பெரும் பரபரப்பு எழுந்தது.

நேபாள நாடாளுமன்றம் அதன் புதிய அரசியல் வரைபடத்தை ஒப்புதல் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தில் நாளை வாக்களிக்க வாய்ப்புள்ளது. லடாக்கில் சீனப் படையினர் இந்தியப் பகுதியை பெருமளவில் ஆக்கிரமித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து நேபாள காவல்துறையினர் தாக்குதல் நடத்தி உள்ளது, குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]