சிங்கப்பூர்: நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் பராஸ் கட்கா, டி-20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியின் கேப்டனும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளார்.
சேஸிங் செய்யும்போது சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.
நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு டி-20 தொடரில், நோபளம் – சிங்கப்பூர் அணிகள் மோதிய போட்டியில் இந்த சாதனை எட்டப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த சிங்கப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை அடித்தது. பின்னர் சேஸிங்கில் நேபாள அணி இறங்கியது. அந்த அணியின் கேப்டன் பராஸ் 52 பந்துகளில் 106 ரன்களை அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இதில் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.
இவருக்கு முன்னதாக டி-20 சர்வதேச போட்டிகளில் மொத்தம் 5 கேப்டன்கள் சதமடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச், ஷேன் வாட்சன், தென்னாப்பிரிக்க அணியின் பாப் டூ பிளசிஸ், இலங்கையின் தில்ஷன் மற்றும் இந்தியாவின் ரோகித் ஷர்மா ஆகியோர்தான் அவர்கள்.
ஆனால், அவர்கள் அனைவருமே முதலில் பேட்டிங் செய்யும்போது சதமடித்தவர்கள். ஆனால், நேபாள கேப்டன் பராஸ் சேஸிங்கில் சதமடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.