நெல்லை:

நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் மிக அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால்,   மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் உள்ள ஏர்வாடி பகுதியில் எஸ்.வி. இந்து துவக்கப்பள்ளி என்கிற தனியார் பள்ளி  செயல்படுகிறது. இங்கு, நேற்று ஆண்டு விழா நடத்தப்பட்டது.  இந்த விழாவில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், இன்று காலை அந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் வீக்கம், எரிச்சல் மற்றும் கண்ணில் தண்ணீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து,  ஐம்பதுக்கும்  மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விழாவில் பங்கேற்ற அனைவருமே  மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டனர்.

அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கண்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் தெரவித்தனர்.

இதற்கிடையே பள்ளி ஆண்டுவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக சக்தி வாய்ந்த விளக்குகளே இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.