பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், தமிழ் இலக்கியவாதியான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சோலியை முடிக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நெல்லை கண்ணன் மீது = பாஜகவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும், தனித்தனியாக புகார் அளித்தனர். பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

காவல்துறையினர் தன்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியான நிலையில், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் நேற்று அனுமதிக்கப்பட்டார். நெல்லை கண்ணன் கைது செய்யப்படாததை கண்டித்து எச்.ராஜா தலைமையில் பாஜகவினர் இன்று மெரினாவில் போராட்டம் நடத்திட, இந்து அமைப்புகள் பலவும் நெல்லை கண்ணனை கைது செய்ய தொடர்ந்து வலியுறுத்தின.

இந்நிலையில் தற்போது பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நெல்லை கண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.