சென்னை,
நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையாக காணமாக 4 பேர் தீக்குளித்தனர். இதில் 3 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கந்துவட்டி கொடுப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கந்துவட்டி சாவுக்கு கலெக்டர் பொறுப்பேற்க வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள் ளஅறிக்கையில் கூறி இருப்பதாவது,
‘திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டத்துக்குச் சென்று கந்துவட்டிக் கொடுமைகுறித்துப் புகார் தெரிவித்து, எந்தப் பலனும் ஏற்படாத நிலையில் மனமொடிந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, ஐந்து வயது மகள் மதி சாருண்யா, ஒன்றரை வயதே நிரம்பிய அட்சய பரணிகா ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர்.
அதில், இசக்கிமுத்து தவிர மற்ற மூவரும் பரிதாபமாக இறந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடுமை நிகழ்ந்ததற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் பொறுப்பேற்க வேண்டும். தென்காசியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் வட்டிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதில் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வட்டியாக மட்டுமே கொடுத்துள்ளனர்.
அசல் தொகை 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயைக் கேட்டு, இசக்கிமுத்து குடும்பத்தினரை மிரட்டித் தொல்லை கொடுத்ததனால், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆறு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், தாயுடன் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழக்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடைச் சட்டம் செயலற்றுக்கிடப்பதைச் சுட்டிக்காட்டி, 2014-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவின் பேரில் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டுமென்று கூறப்பட்டது.
ஆனால், இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த கோர நிகழ்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் கந்துவட்டி சட்டத்தை காவல்துறையினர் புறக்கணித்த காரணத்தினாலும், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காததாலும் இந்த கோர நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. எனவே, நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கந்துவட்டிக் கொடுமை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமானவர்கள் அனைவரையும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் இதுவரை முடக்கப்பட்டு, செயலற்றுக்கிடக்கும் கந்துவட்டி தடைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இச்சட்டத்தை முறையாக அமல்படுத்தினாலே, கந்துவட்டிக் கொடுமையை ஒழித்து, இத்தகைய கோர தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும். கந்துவட்டிக் கொடுமை தாளாமல் தற்கொலை செய்துகொண்ட தாய் உள்ளிட்ட இரண்டு குழந்தைகளுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினருக்கு, தமிழக அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 25 லட்ச ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், இந்த தற்கொலைகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.