நெல்லை:
திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி வண்ணாரப்பேட்டை திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக தொண்டர்கள்  போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க. 47 வார்டுகளில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதில் கண்டியபேரி, ராஜாஜிபுரம் பகுதிகள் அடங்கிய 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக கந்தசாமி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார்
இந்நிலையில் இன்று 55-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தி.மு.க. மத்திய மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் வேட்பாளர் கந்தசாமியை மாற்ற வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கந்தசாமி வெளியூரை சேர்ந்தவர் என்றும், எனவே உள்ளூரை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.