முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பற்றிய தனது நினைவுகளை ஒரு நாளிதழில் கட்டுரையாக பகிர்ந்திருக்கிறார். அதிலிருந்து இந்திய தலைவர்களுடன் பிடல் காஸ்ட்ரோவுக்கு இருந்த உறவு பற்றி பல அரிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

fedel33

பிடல் காஸ்ட்ரோதான் கியூபா, கியூபாதான் பிடல் காஸ்ட்ரோ. அவரது மறைவு ஒட்டுமொத்த உலகையும் பாதித்த ஒரு நிகழ்வு. அவர் ஒரு உலக தலைவர். அவர் 1979-ஆம் ஆண்டு நடந்த 6 வது அணிசேரா இயக்கத்தின் உச்சி மாநாட்டுக்கு தலைவராக இருந்தார். அதை அடுத்த 1983-ஆம் ஆண்டின் உச்சி மாநாட்டுக்கு இந்திரா காந்தி தலைவராக இருந்தார். நான் அந்த 7-வது உச்சி மாநாட்டின் பொதுச்செயலராக பணியாற்றினேன்.
நான் 1982-ஆம் ஆண்டு அணிசேரா இயக்க உச்சி மாநாடு நடத்துவது குறித்த சில அனுபவங்களை பெறுவதற்காக கியூபா தலைநகர் ஹவானா செல்ல வேண்டியது இருந்தது. அப்பொழுது கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாதிருந்தபோதும் நான் அங்கிருந்து கிளம்பும் நாளன்று அவரே வந்து என்னை சந்தித்து இன்ப அதிர்ச்சியளித்தார். அவர் என்னைப் பார்க்க வருகிறார் என்று தெரிந்ததும், அவரிடம் என்ன பேசுவது? எப்படி பேசுவது என்ற பதட்டத்தில் இருந்தேன். எனது பதட்டத்தை தனிக்கும் வகையில் அவரே என்னுடன் சகஜமாக பேசினார்.
அவர் என்னிடம் கேட்ட கேள்வி நான் சற்றும் எதிர்பாராதது. “இந்த கூர்க்காக்கள் என்பவர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார். நான் அவரிடம் கூர்க்காகள் மிகச் சிறந்த போர்வீரர்கள், அவர்களுக்கென்று பிரிட்டிஷ் ராணுவத்தில்கூட தனி ரெஜிமண்ட் உள்ளது. அவர்களை பற்றி தங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு புத்தகத்தில் வாசித்தேன் என்றார்.
அதன் பிறகு வேறு இரண்டு தருணங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பண்டித ஜவகர்லால் நேருவை எப்பொழுது முதல் முறையாக சந்தித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் செப்டம்பர் 1960-ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்பொழுது எனக்கு வயது 34-தான் இருக்கும். ஐ.நா சபையின் 15-வது ஆண்டுவிழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு எனக்கு தங்குமிடம்கூட தரப்படாத நிலையில் ஹார்லெம் எனப்படுமிடத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன் அங்கு என்னை முதலில் வந்து சந்தித்த தலைவர் ஜவஹர்லால் நேரு ஆவார். அவர் என்னுடன் பேசியது எனது மனவுறுதியையும், தன்னம்பிக்கையையும் அதிகரித்தது. நேரு என்னிடம் காட்டிய அன்பை என்னால் மறக்கவே முடியாது என்று நெகிழ்ந்து பேசினார்.
அதன் பின்னர் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை 1988-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவுடன் சென்றிருக்கும்போது சந்தித்தேன். பிடல் காஸ்ட்ரோ ஒரு அற்புதமான தலைவர் அவரை இந்தியா எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கும், இவ்வாறு நட்வர்சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.