சென்னை :  
நீட் எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் சுமார் 4 லட்சம் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி  நீட் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
முதல்கட்ட தேர்வு  மே 1ந் தேதி நாடு முழுவதும் 52 முக்கிய நகரங்களில்  1040 மையங்களில் நடந்தது.  இரண்டாவது கட்டமாக ஜூலை 24ந்தேதி நாடு முழுவதும் உள்ள 56 முக்கிய நகரங்களில் 739 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
நீட் நுழைவுத்தேர்வு எழுத 8 லட்சத்து 2 ஆயிரத்து 594 பேர் தகுதி பெற்றனர். ஆனால் அதில் ஏழு லட்சத்து 31 ஆயிரத்து 223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள்  இன்று (ஆகஸ்ட் 17) வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தேர்வு முடிவுகளை நேற்று திடீரென வெளியிட்டு விட்டது.
தேர்வில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின்கீழ்  கவுன்சலிங்கில் கலந்துகொள்ள 19 ஆயிரத்து 325 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 11 ஆயிரத்து 58 மாணவர்களும், 8 ஆயிரத்து 266 மாணவிகளும், ஒரு திருநங்கையும் இடம்பெற்றுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த மாணவர் ஹெட் ஷா  685 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
இதையடுத்து   நாடு முழுவதும்  ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மையங்களில் ஆன்லைன் மூலம்  கவுன்சிலிங் நடத்தப்படும்.  இதற்காக மாணவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் 27ந் தேதி  ஆன்லைன் கவுன்சலிங்  தொடங்குகிறது.  நீட் தேர்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குகின்றன.
மாணவர்கள் சேராத சீட்கள் செப்டம்பர் 20ம் தேதி மாநில அரசுகளுக்கு ஒப்படைக்கப்படும்.
எம்பிபிஎஸ் – பிடிஎஸ் காலி இடங்கள்:
இந்தியா முழுவதும் உள்ள 412 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 52,715 எம்பிபிஎஸ்  இடங்கள்  இதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
இதில் அரசு கல்லூரிகளில் உள்ள 22,715  இடங்கள்  ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டன. மீதமுள்ள  30 ஆயிரம் இடங்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.