மதுரை: நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பான மாணவர் தொடர்ந்த வழக்கில், தேர்வு எழுதிய மாணவரின் ஒரிஜினல் ஓஎம்ஆர் தேர்வுதாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவு குளறுபடி காரணமாக, திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தான், கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கான நீட் நுழைவி தேர்வை நல்ல முறையில் எழுதி இருந்தேன். அதன்பின் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் OMR விடைத்தாள் பக்கங்களை பதிவேற்றம் செய்தது. அதைப்பார்த்த தான் அதிர்ச்சி அடைந்தேன். அதில் எனக்கு 115 மதிப்பெண்களே போடப்பட்டு உள்ளது. நான் மொத்தமுள்ள 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்ணுக்கு சரியான பதில் எழுதியிருந்தேன். ஆனால் 115 மதிப்பெண்களே கிடைத்துள்ளது.
115 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய OMR விடைத்தாளை எனது பெயரில் பதிவேற்றம் செய்துள்ளனர். ஆனால், அந்த OMR விடை தாள் நான் எழுதியது இல்லை. எனது விடைத்தாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று (செப் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்மோகன் ஆஜராகி வாதாடினார். இதனை கேட்ட நீதிபதி, மாணவர் எழுதிய நீட் தேர்வின் அசல் OMR விடைதாள் அதனுடைய கார்பன் விடைத்தாளையும் நீட் தேர்வு முகமையின் செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.