மருத்துவ மேல் படிப்பு சேர்வதற்கு நீட் தகுதித் (NEET-PG) தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் அவர்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2022-23 கல்வியாண்டில் 4400 முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக இருந்தது தவிர கடந்த மூன்று ஆண்டுகளில் முதுநிலை மருத்துவ இடங்களில் 12758 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ மற்றும் துணை மருத்துவ படிப்புகளில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளதைச் சுட்டிக்காட்டி நீட் பிஜி 2023 (NEET-PG 2023) கட்- ஆஃப் சதவீதத்தை 30% வரை குறைக்கக் கோரி இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியது.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நீட் தேர்வில் 0 வாங்கினாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் அனுமதி வழங்கலாம் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
2023 – 24 முதுநிலை சேர்க்கைக்கு இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு முதல் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு மதிப்பெண் பூஜ்ஜியம் ஆனது.
அதேவேளையில், எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்களில் கடந்த ஆண்டு 262 இடங்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 860 இடங்களும் காலியாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்திருந்தது, ஆனால் இதற்கான நீட் தகுதித் தேர்வு குறித்து எந்த ஒரு மாற்றமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.