டெல்லி: நாளை மறுதினம் (18ந்தேதி) நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு இருப்பதுடன், பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீட் தேர்வையும் ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். முதுநிலை நீட் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இளம் மருத்துவர்களின் நலனை கருத்தில்கொண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
நீட் பிஜி 2021 க்கு மொத்தம் 1,74,886 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நீட் பிஜி மூலம், 12,690 மாஸ்டர் ஆஃப் சர்ஜரி (எம்எஸ்), 24,360 மருத்துவ மருத்துவர் (எம்.டி), மற்றும் 922 பி.ஜி டிப்ளோமா இடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 13 முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.