டில்லி,

ந்தியா முழுவதும் மே  7ந்தேதி அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்)நடைபெற உள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால், தற்போது, விண்ணப்பிக்க  5 நாட்கள் மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது உச்சநீதி மன்றம்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு அறிவித்து வந்தது. அதற்காக,  தமிழக சட்டப்பேரவையில், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால்,  இந்தச் சட்டத்துக்கு, இன்னும் ஜனாதிபதி ஒப்புதல் கொடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு குறித்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள்,  மருத்துவ நுழைவு தேர்வுக்கு (நீட்)  ஏப்.1 ந்தேதி முதல் ஏப்ரல் 5 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என 5 நாட்கள்  கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும்,  25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க முடியாது என்ற சிபிஎஸ்இ உத்தரவையும் ரத்து செய்தனர் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

இதன் காரணமாக மருத்துவம் படிக்க விரும்பும்  தமிழக மாணவர்கள், உச்சநீதிமன்றம் அளித்துள்ள 5 நாட்கள் கால அவகாசத்தில் பதிவு செய்து நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழக அரசின் கையாலாகததனத்தால் தமிழக மாணவ, மாணவிகளின் மருத்துவ மேற்படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பை நம்பியதால் இன்று தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரேமாதிரியான பாடத்திட்டம் வராத வரையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்காத மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வது கடினம். எனவே, தமிழக அரசு உடனடியாக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் குரல்கொடுத்து வருகின்றனர்..

தமிழகத்தில் இதுவரை  நீட் தேர்வு இல்லாமல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை  நடைபெற்று வந்தது.. இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவபடிப்பில் சேர முடிந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல்  நீட் தேர்வு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதாலும், தேர்வின் வினாக்கள்  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி இருப்பதாலும்  தமிழக மாண வர்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.