சென்னை:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ளது தொடர்பாக பிரபல மருத்துவக்கல்லூரிகளான  எஸ்ஆர்எம், ஸ்ரீபாலாஜி, ஸ்ரீசத்யசாய் மருத்துவக்கல்லூரிகளின்  தலைவர்களுக்கு (Dean) சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பல மாணவர்கள் சேர்ந்துள்ள விவரம் அம்பலமான நிலையில், 3 தனியார் மருத்துவக்கல்லூரிகளைச் சேர்ந்த டீன்களை விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த சென்னை  தண்டையார்பேட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலமாக தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்து வரும் சிபிசிஐடியில், உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உதித்சூர்யா போல மேலும் பலர் ஆள்மாற்றம் செய்து, மருத்துவக்கல்லூரியில் இடம்பெற்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவர், அவரது தந்தை டேவிட் ஆகியோர் ஆள் மாறாட்ட குற்றத்தின் தொடர்ச்சியாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினரின் வேட்டையில் 3 மாணவர்கள் சிக்கினர்.  இதில் மாணவர் பிரவீன் மற்றும் அவரது தந்தை ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். மற்றோர் மாணவனான ராகுல் மற்றும் அவருடைய தந்தையை சிறையில் அடைப்பதற்கான வேலைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மற்றோர் மாணவியான அபிராமியை தற்போது விசாரணை வளையத்துக்குள் வைத்துள்ளார். அவர் தொடர்பான தகவல்களும், ஆவணங்களையும் தனிப்படை போலீசார் திரட்டி வருகின்றனர்.

பல இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் முஹம்மத் ஷஃபி என்பவரை சிபிசிஐடி போலீசாரால் கைது செயப்பட்டுள்ளார்.  வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரை சேர்ந்தவர் ராஜா. திருப்பத்தூர் , வாணியம்பாடி, அரூர் நகரங்களில் மருத்துவமனை நடத்தி வருபவர். இவரது மகன் மருத்துவர் முஹமத் ஷஃபி. இவர் வாணியம்பாடி காதர்பேட்டையில் உள்ள கிளினிக்கை பார்த்துக்கொள்கிறார்.

இவருக்கு தனது மகன் இர்ஃபான் னை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முஹம்மத் ஷஃபியை சிபிசிஐடி போலீசார் செப்டம்பர் 29 தேதி கைது செய்து விசார ணைக்காக அழைத்து சென்றனர். இவரது மகன் இர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவராக சேர்ந்துள்ளார். தான் மாட்டி கொள்வோம் என தெரிந்த மாணவன் இர்ஃபான் கல்லூரியில் விடுப்பு எடுத்துவிட்டு தலைமறைவான நிலையில், அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது காரணமாக அவரது தந்தை மருத்துவர் முஹம்மத் ஷஃபியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட பல மாணவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த   3 தனியார் மருத்துவக்கல்லூரிகளின் டீன்களையும் சிபிசிஐடி விசாரிக்க உள்ளது. அதன்படி ஸ்ரீசத்யசாய் மெடிக்கல் கல்லூரி டீன் பிரேம்நாத், மருத்துவ கண்காணிப்பாளர் சுகுமாறன் அண்ணாமலை, ஸ்ரீபாலாஜி மெடிக்கல் காலேஜ் டீன் சிவகுமார், எஸ்ஆர்எம் மெடிக்கல் கல்லூரி டீன் சுந்தரம் ஆகியோருக்கும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.