சென்னை:

நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என  தேசிய தேர்வுகள் முகமை அறிவித்து, தற்போது ஹால்டிக்கெட் பதவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் தமிழக மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோன்ற பல குளறுபடிகள் நடைபெற்ற நிலையில், தற்போதும் அது போன்று ஹால் டிக்கெட்டில் பல்வேறு  குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மத்தியஅரசு, கடந்த ஆண்டைபோல, இந்த ஆண்டும் திட்டமிட்டு தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறதோ என மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த குளறுபடி குறித்து, தமிழக அரசு இதுவரை கண்டுகொள்ளாத நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் மவுனம் சாதித்து வருவது மக்களிடையே சந்தேகங்களை உருவாக்கி வருகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மத்தியஅரசு பிடிவாதமாக செயல்படுத்தி வரும் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள்  வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஏராளமான அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இருந்தும், தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்களே ஆக்கிரமித்து வருகின்றனர்.

இதுவே தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடி செய்திருப்பது மத்தியஅரசின் குள்ளநரித்தனம் என்று கூறப்படுகிறது.

நீட் தேர்வு மே 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகளின்  பலரது   ஹால் டிக்கெட்களில் தேர்வு நடைபெறும் ஊர் வேறாகவும், தேர்வு மையம் வேறாகவும் உள்ளது. இது மாணவ மாணவிகள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களுக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ப்ரியதர்ஷனி என்ற மாணவி நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தபோது தேர்வு எழுதும் மைய எண் மதுரை 4 ஆயிரத்து 106 எனவும் தேர்வு எழுதும் இடம் திருநெல்வேலி உள்ள அரசுப்பள்ளி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியும் பெற்றோரும் இந்த குளறுபடிகளை யாரிடம் தெரிவிப்பது என குழப்பதில் ஆழ்ந்துள்ளனர்

2019-20ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும்  15.19 லட்சம் மாணவ மாணவிகள்  விண்ணப்பம் செய்து உள்ளனர். ‘ தமிழக மாணவர்கள் மட்டும் 1.40 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

நீட் தேர்வு மே 5ம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றன. தமிழக மாணவர்கள், அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வை எழுத வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதனால் பல பிரச்சினைகள் எழுந்தன. அதுபோல கேள்வித்தாள் விவகாரத்தில் சர்ச்சைகள் எழுந்தன.

இதுதொடர்பாக பல வழக்குகள் தொடர்ந்த நிலையில், மதுரை உயர்நீதி மன்றம் மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக உத்தரவிட்ட நிலையில், உச்சநீதி மன்றம் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் கண்ணசைவுக்கு ஏற்ப, தமிழகத்தின் கோரிக்கையை உதாசினப்படுத்தியது.

இது விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில்,  எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு, இந்தாண்டு தமிழக மாணவர்கள் நீட் தேவை தமிழகத்திலேயே எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டும் ஹால்டிக்கெட்டில் குளறுபடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், உடடினயாக இதுதொடர்பாக தகுந்த உடனடி நடவடிக்கை  எடுக்க முயற்சிக்க வேண்டும்… கடந்த ஆண்டைபோல காலம் கடந்து நடவடிக்கை எடுத்தால், அதன்ல் எந்தவித பிரயோஜனமும் இல்லை … இந்த ஆண்டும் மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி விடும்…

இந்நிலையில் ஹால்டிக்கெட் குளறுபடிகள் குறித்து மதுரை மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

நீட் ஹால் டிக்கெட்டில் ஏதேனும் குழப்பம் இருந்தாலோ விவரங்கள் சரியாக இல்லாமல் இருந்தாலோ அத்தகைய ஹால் டிக்கெட்டுகளை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்  அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.