சென்னை; நீட் தேர்வில் தோல்வியில் தோல்வி அடைந்ததால், சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசு நடத்தும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் பலர் தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதனால், நீட் தேர் ரத்து செய்ய வேண்டும் என தமிழகஅரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. ஆனால், அதை ஏற்க மத்தியஅரசும், உச்சநீதிமன்றமும் மறுத்து வருகிறது. இந்தநிலையில், நடப்பாண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 56.28 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்த தேர்வில் தோல்வி அடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா (19), நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டுக்கொண்டார். மகளை மீட்ட பெற்றோர், கீழ்பாக்கம் கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்ததில் மாணவி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.