டில்லி,
அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை டில்லியில் இன்று சந்தித்து பேசினர்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் டெல்லி சென்றனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவையும் அலுவலகத்தில் சந்தித்து வலியுறுத்தினர்.
அப்போது, நீர் தேர்வு குறித்து தமிழ சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட அவசர மசோதா குறித்து எடுத்துரைத்தனர். மேலும், இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனே பெற்று தரவும் வலியுறுத்தினர்.
அதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக அமைச்சர்கள், ‘நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு சாதகமான பதிலைத் தரும்’ என்று நம்புவதாகவும், நீட் தேர்வு தொடர்பான சட்ட விவகாரத்தில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
நீட் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பும் தேதி முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை உறுதியான முடிவு எதுவும் அறிவிக்கவில்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு மருத்துவ படிப்பை எதிர்நோக்கி உள்ள தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது….