சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு எடப்பாடி அரசும், மோடி அரசும் பொறுப்பு என்றும், தமிழகத்தில் 2017ல் எடப்பாடி ஆட்சியில்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனிதா உள்ளிட்ட 16 தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டதற்கு எடப்பாடி அரசும் தான் மோடி அரசும் பொறுப்பு என்று தெரிவித்துள்ளதுடன், தமிழ்நாட்டில் நீட் தேர்வை திணித்தது பாஜக-வும் அதிமுக-வும் தான் என அவர் குற்றம் சாட்டியுள்ளார், மேலும், நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்ப அதிமுக-வினரும் தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
”தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்குப் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாகப் பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்பத் திரும்பப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அதிமுக முயல்கிறது.
நீட் தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அதிமுகவினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் நீட் தேர்வைத் திணித்தது பாஜகவும் அதிமுகவும்தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் கூற முடியும்.
உச்ச நீதிமன்ற ஆணையின்படி 2013ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவக் கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வை நடத்த முடிவு செய்தது. இந்த முடிவுக்கு எதிராக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 18 ஜூலை 2013இல் நீட் தேர்வுகளை ரத்து செய்தது.
கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் 2013இல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் 11 ஏப்ரல் 2016இல் சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. இதில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலமாக 2016 முதல் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் அதிமுகவும்தான் ஆட்சியிலிருந்தன.
நீட் தேர்வில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு 20 மே 2016இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த விலக்கு ஓராண்டிற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நீட் தேர்வை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாயமாக்குகிற வகையில் மத்திய பாஜக அரசு மக்களவையில் 18 ஜூலை 2016இல் மசோதாவை நிறைவேற்றியது. அதேபோல, 1 ஆகஸ்ட் 2016 அன்று மாநிலங்களவையில் அதே மசோதா குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வைக் கட்டாயமாக்குகிற வகையில் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா – 2016 மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறுவதை எதிர்த்து அதிமுக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது ஏன்? பாஜக அரசின் சட்டபூர்வமான நீட் திணிப்பை எதிர்த்து வாக்களிக்க மக்களவையில் 39 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் கொண்ட அதிமுகவிற்கு துணிவில்லாமல் போனது ஏன்? மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது மசோதாவை ஆதரிப்பதற்குச் சமமாகும். இது தமிழகத்திற்கு அதிமுக செய்த பச்சை துரோகமாகும்.
தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 16 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு மோடி அரசும், எடப்பாடி அரசும்தான் பொறுப்பாகும். இவை வெறும் தற்கொலைகள் அல்ல. அன்றைய ஆட்சியாளர்களின் தவறான அரசியல் அணுகுமுறைகளால் ஏற்பட்ட படுகொலைகள்.
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டின் காரணமாக மொத்தம் 405 இடங்கள் கிடைத்ததாக எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்கிறார். கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 8.41 லட்சம் பேர். இதில் 3.44 லட்சம் பேர் – அதாவது 41 சதவிகிதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
தமிழகத்தில் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில் 3,400 இடங்கள் உள்ளன. இதில் உள் ஒதுக்கீட்டின் படி 405 இடங்களில்தான் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மீதி 3,000 இடங்களைத் தட்டிப் பறித்தது யார் ? அரசுப் பள்ளிகளில் படிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் உள்ள சமூக அநீதிக்கு மத்திய பாஜக அரசும், அன்றைய அதிமுக அரசும்தான் பொறுப்பாகும்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு அதிமுக அரசு செய்த துரோகத்தை எடப்பாடி பழனிசாமி ஆயிரம் அறிக்கைகள் விட்டாலும் மூடிமறைக்க முடியாது. தமிழ்ச் சமுதாய மாணவர்களின் எதிர்காலத்தை நீட் தேர்வு திணிப்பின் மூலம் பாழடித்த பாஜகவையும், அதிமுகவையும் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்கவே மாட்டார்கள்.
அதற்கான உரிய பாடத்தை 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு மக்கள் வழங்கியதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிடக் கூடாது. எனவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மத்தியில் 2014இல் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு தமிழகத்தில் 2017இல் எடப்பாடி ஆட்சியில்தான் நீட் தேர்வு முதல் முறையாகத் திணிக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.