சென்னை: நீட் தேர்வில்  மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி என்றும், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவினால்தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது என   அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நடப்பாண்டு நீட் தேர்வு எழுதிய 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையானது. இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவாகி உள்ளன. இதையடுத்து,  ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பட்டியல் சாதி (எஸ்சி) மாணவர் மேல்முறையீடு செய்ததை அடுத்து , அவருக்கு நான்கு கருணை மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற பல நீதிமன்றங்கள் கருணை மதிப்பெண்களை வழங்க என்டிஏக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்தே சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக என்டிஏ தெரிவித்தது. இருந்தாலும் இது சர்ச்சையான நிலையில்,   கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு வரும் 23ந்தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக,  ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பட்டியல் சாதி (எஸ்சி) மாணவர் மேல்முறையீடு செய்ததை அடுத்து , அவருக்கு நான்கு கருணை மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற பல நீதிமன்றங்கள் கருணை மதிப்பெண்களை வழங்க என்டிஏக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்தே சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக என்டிஏ தெரிவித்தது. இருந்தாலும் இது சர்ச்சையான நிலையில், தற்போது கருணை மதிப்பெண் பெற்ற  மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் நீட் தேர்வு வர அப்போதைய அதிமுக அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றும், அவர்களாலேயே தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது என்று  குற்றம் சாட்டினார். மேலும்,  ”நீட் தேர்வு குளறுபடியால் நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது. நீட் தேர்வில் என்டிஏ கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி  என்றும் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் எந்த  ஊழலும், குளறுபடிகளும் நடக்கவில்லை. அரசு தனது நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது  என்று கூறியதுடன்,  நீட் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க  மத்தியஅரசு தயாராக உள்ளது என்றார். மேலும், தற்போதைய  பிரச்னை கவனத்தில் கொள்ளப்பட்டு கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும்  கூறியவர்,   கருணை மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களின் தேர்வு மீண்டும் நடத்தப்படும். மீண்டும் ஜூன் 23ம் தேதி தேர்வு நடைபெறும் என்றார்.

மேலும்,  நீட் கவுன்சிலிங் ஜூலை 6 முதல் தொடங்கும். ஜூன் 23-ம் தேதி நடைபெறும் தேர்வில் மீண்டும் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதன் முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும். தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு கிரேஸ் மதிப்பெண்கள் தொடர்ந்து பொருந்தும் என்றார்.

நீட் தேர்வு – ஒரு பார்வை:

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை முதல்முதலில் அறிமுகப்படுத்திய அப்போதைய காங்கிரஸ் ஆட்சி. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் நடைபெற்று வந்தன. இந்த வழக்கில், காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த மூத்த அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த தேர்வை நாடு முழுவதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, நடைமுறைப்படுத்தியது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே (2007)  அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளால் தடுக்கப்பட்டு, பின்னர் , கடந்த 2017 முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. முன்னதாக, நீட் தேர்வு  நடத்தி மாணவர்களை சேர்க்க  உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு இடைக் கால தடை விதித்திருந்தது.

இந்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இதற்கு முன்னதாக பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தவும் 2016ம் ஆண்டு  உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு, தமிழகம் உள்பட சில  மாநிலங்களிலும் மாணவர்கள் , கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த மனுக்களை  விசாரித்த உச்ச நீதிமன்றம்,முதலில் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்த நிலையில், கண்டிப்பாக நடப்பாண்டே (2016)   கட்டாயம் நடத்த வேண்டும் என மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொது நுழைவுத் தேர்வுக்கான புதிய அட்டவணை முடிவு செய்வதாக கூறியது. ஆனால், இதற்கு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை எதிர்த்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தை நாடினார். அதன்படி தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு கிடைத்தது. அப்போதைய விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில்,   2007ம் ஆண்டில் இருந்தே பொது நிழைவுத் தேர்வு கிடையாது என்றும், மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த சிறப்பு சட்டம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது. பொது நுழைவுத்தேர்வில் தமிழகத்தை சேர்க்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.  மேலும் கல்வி மாநிலத்தின் உரிமை என்றும் வாதிடப்பட்டது. இதனையடுத்து பொது நுழைவுத்தேர்வு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.  பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.  அதாவது, ஏப்ரல் 28, 2016 அன்று, 2016-17ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது,  மேலும், அனைத்து மாநில மாணவர்களும் எழுதும் வகையில், பல்வேறு மாநில மொழிகளில் வினாத்தாள்கள் உருவாகவும் உத்தரவிட்டதுடன்  இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர “நீட்” தேர்வுமுறை கட்டாயம் என்று கூறியது.

இதைத்தொடர்ந்து, 2017-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான “நீட்” தேர்வு முதன்முறையாக நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 2017ம் ஆண்டு  கடந்த மே 7-ம்தேதி ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளில்  நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. இதை  சுமார் 11.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த தேர்வில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இருந்த வினாக்களும் தமிழ் உள்ளிட்ட பிற மாநிலமொழிகளில் இடம்பெற்ற வினாக்களும் வேறு, வேறாக இருந்தன. இதனால் இந்தத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறி மாணவர்களில் ஒரு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “நீட்” தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத்தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது.  அதை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடுஅரசின் மனுவை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டுவந்து நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு பல முறை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதை குடியரசு தலைவர் மாளிகை ஏற்க மறுத்து விட்டது. அதுபோல பல வழக்குகள் போடப்பட்டு, இறுதியில் அவை அனைத்தும் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்து.

இதுதொடர்பாக  தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு சிறப்பு  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,  அரசியல் சட்டப் பிரிவு 246-ன் கீழ் நாடாளுமன்ற சட்டம் இயற்றும் ஒன்றியப் பட்டியல் யூனியன் லிஸ்ட், மாநில சட்டமன்ற சட்டம் இயற்றும் ஸ்டேட் லிஸ்ட், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை ஆகியவை சட்டம் இயற்றும் அதிகாரமுள்ள ஒத்திசைவு பட்டியல் Concurrent List என்று வகைப்படுத்தி சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த சட்டம் இயற்றும் இந்த அதிகாரம் தான் கூட்டாட்சியின் தத்துவமாக விளங்கிக்கொண்டிருக்கின்றது. அது நம்முடைய அரசியல் சட்டத்தின் போற்றத்தக்க மாண்பாக கருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மருத்துவக்கல்வியைப் பொறுத்தவரையில் Concurrent List 25-ல் Entry-யாக இருக்கின்றது.

எனவே, மத்திய அரசுக்கு எப்படி சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கின்றதோ அதேபோல் இந்த சட்டப்பேரவைக்கும் சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் நிறைவாக இருக்கின்றது. அதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு Concurrent List-ல் உள்ள பொருள் குறித்தும் சட்டம் இயற்றும் அதிகாரம் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 254/2ன் கீழ்  வழங்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு இணையாக மாநில சட்டப்பேரவையின் இறையாண்மையை அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் இறையாண்மையை சட்டம் இயற்றக்கூடிய அதிகாரத்தை அரசியல் சட்டம் வகுத்து கொடுத்திருக்கக்கூடிய கூட்டாட்சி முறையை கேள்விக்குறியாக்கக்கூடிய வகையில் நீட் மசோதாக்கள் 27 மாதங்களாக கிடப்பில் உறங்கிக் கொண்டிருந்திருக்கின்றது என கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், கூட்டுறவு கூட்டாட்சி என்று சொல்லிக்கொண்டே, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவமும் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றது. அரசமைப்பு சட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய அநீதி என்பதை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகின்றேன். எனவே, அரசியல் சட்டமைப்பு சட்டப்படி சட்டப்பேரவைக்கு இறையாண்மை அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கக்கூடிய சட்டம் இயற்றும் முக்கியமான அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கின்றது என குற்றம் சாட்டியிருந்தார். அதுபோல மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை சட்ப்பேரவையில் பதிவு செய்தனர்.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக தமிழ்நாடு இரசு இயற்றும் சட்டங்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  அப்போதைய  அதிமுக அரசு கடந்த 2020ம் ஆண்டு,  அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றியது.

முன்னதாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் அவர்கள் தலைமையில்  நீட் உள்ஒதுக்கீடு குறித்து பரிசீலிக்க  கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2020 ஜூன் 8ஆம் தேதியன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. அதில் 10 சதவீதத்திற்குக் குறையாமல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என்றும் ஐந்தாண்டுகள் கழிந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அளவிடலாம் என்றும் பரிந்துரைத்தது.

இது தொடர்பாக  2020 ஜூன் 15, ஜூலை 14 ஆகிய தேதிகளில் அமைச்சரவைக் கூட்டம் விவாதித்தது. இதற்குப் பிறகு, அதன்படி தமிழக அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவு செய்தது. அதற்கான சட்டம்  2020ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.  தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டுக்கு கவர்னர் அனுமதி வழங்காத நிலையிலேயே, தமிழ்நாடு அரசு,  நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுவிட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாலும் அரசியல் சாசனத்தின் 162வது பிரிவு அளிக்கும் அதிகாரங்களின்படியும் இந்த உத்தரவை வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்தே, தமிழக அரசின் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு  கவர்னர் மற்றும்  மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து. இதன்மூலம் தற்போதுவரை   தமிழ்நாட்டில்  மருத்துவ கல்வி பயிலும் மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறார். இந்த இடஒதுக்கீட்டால் மருத்துவம் படிக்கும் மாணவர்களின்  எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த இடஒதுக்கீடு சட்டத்தின்படி,  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வருகிறது. இந்த  கலந்தாய்வில் கலந்துகொண்டு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்துவருகிறார்கள்.  மேலும், மாநில மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுவதால், தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வரும் நிலையில், தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.

இருந்தாலும் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும், கல்வியாண்டுதொடக்கத்தில் ‘ நீட் ‘ அரசியலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீட் தேர்வில் உள்ள  சாதக பாதகங்கள் இருந்தால், அதைகுறித்து விவாதித்து முறையான  நடைமுறையை அமல்படுத்த மத்திய மாநிலஅரசுகள் முன்வர வேண்டுமே தவிர, இதை வைத்து மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவது தவிர்க்கப்படவேண்டும். 

நாடு முழுவதும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை கட்டாயமாக்கியது உச்சநீதிமன்றம். ஆனால், அரசியல் கட்சிகள், தங்களது அரசியல் நலன்களுக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி  வருகின்றனர் என்பதே உண்மை.