சென்னை,

 ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு பின்னர் ஆதரவு தெரிவித்தது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையானது இந்திய மருத்துவ சபையின் (எம்.சி.ஐ) விதிகளின்படியே நடைபெற வேண்டும் என வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதனை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் குழுவானது உயர் நீதிமன்ற அமர்வின் முன் மேல்முறையிடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

தேர்வு விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு இப்போது ஆதரவளிப்பது ஏன்? நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்றும் நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.

நீட் ரத்து சட்டம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியது. சட்டத்திற்கு ஒப்புதல் பெற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,  மாநில அரசு ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால் மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்கிறதா? நீட் தேர்வு மதிப்பெண்தான் சேர்க்கைக்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கபடுகிறதே? இது தொடர்பாக இந்திய மருத்துவ சபையின் (எம்.சி.ஐ) விதிகள் என்ன சொல்கிறது

இவ்வாறு நீதிபதிகள் அமர்வு கேள்விகளை எழுப்பியது. பின்னர் இந்த விவாகாரம் தொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ சபையும் நாளை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.