டில்லி,
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம், 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஏற்கனவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து மத்திய அரசு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவானது.
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய சுகாதாரத்த துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவையும் அவர்களது அலுவலகத்தில் சந்தித்து வலியுறுத்தினர்.
மேலும், தமிழகத்தில் நீர் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனே பெற்று தரவும் வலியுறுத்தினர்.
ஆனால், இன்னும் 15 நாளில் நீட் தேர்வு நடைபெற உள்ளதால், தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.
அடுத்த மாதம் 7ந்தேதி தேர்வு நடைபெற உள்ளதால், தமிழக அரசு இதுவரை உறுதியான அறிவிப்பு எதையும் வெளியிடாததால் மாணவர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில், நாமக்கல், நெல்லை, வேலூர் ஆகிய 3 இடங்களில் புதிதாக நீட் தேர்வு நடைபெறும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 80 இடங்களில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த தேர்வு, இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 103 நகரங்களில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் பொன்னாரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க உடனே மத்திய அரசிடம் அனுமதி கோரி வலியுறுத்தி வருகிறார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடன் இருக்கிறார்.
தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி வரும் நிலையில், மத்திய அமைச்சர் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக மேலும் 3 மாவட்டங்கள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறி இருப்பது தமிழக மக்களை மத்திய பாரதிய ஜனதா அரசு வஞ்சித்து வருவதும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அலட்சியப்படுத்தி வருவதும் சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகிறது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை அமல்படுத்தாத வரையில், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு நீட் போன்ற அகில இந்திய தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
நீட் தேர்வுக்கான காலம் நெ ருங்கி வந்துள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை உறுதியான முடிவு எதுவும் அறிவிக்கவில்லை.
இதன் காரணமாக இந்த ஆண்டு மருத்துவ படிப்பை எதிர்நோக்கி உள்ள தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது….