மதுரை: மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில், தற்கொலை சம்பவங் கள் அதிகரித்து வருகின்றன. இன்று காலை மதுரையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது தருமபுரி மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடைபெற்றுள்ளது.
 தொடர் தற்கொலைகள், நாளை நீட் தேர்வு எழுத தயாராகி வரும் தமிழக  மாணவ மாணவிகளி டையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் கொந்தளிப்பான மன நிலையில் உள்ளனர்.
நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 13ந்தேதி) நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது.  தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழகம் உள்பட பல மாநில அரசுகள் கோரிக்கை வைத்தும், அதை மத்தியஅரசு ஏற்றுக்கொள்ள மறுத்து, பிடிவாதமாக தேர்வை நடத்துகிறது.
கொரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்தியஅரசாலும், உச்சநீதி மன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை  மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்நிலையில், நாளை நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவன் ஆதித்யா (20) இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் குடியிருந்து வருபவர் இவரது தந்தை மணிவண்ணன்,  சித்ரா தம்பதியினர். இவரது மகன் ஆதித்யா.

நீட் தேர்வுக்காக தயார் செய்து கொண்டு வந்த நிலையில், இன்று திடீரென  தற்கொலை  முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் நீட் தேர்வு எழுதவிருந்த இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.