சென்னை :

நீட் தேர்வுக்கு எதிராகவும், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம்  மற்றும் புதுச்சேரியிலும் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மருத்துவ நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு காரண மாக தமிழக கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது.

இந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும், மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி கேட்கப்படுவதால், தமிழக மாணவர்கள் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை.

இந்நிலையில் தமிழக பாடத்திட்டத்தில் பயின்று, மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்ற வேண்டும் என்ற கனவு கண்டு, பிளஸ்2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக  தனது கனவு நிறைவேறாததால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகமே கொந்தளித்துபோய் உள்ளது.

இதையடுத்து கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் அரசியல் கட்சியினரும், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களும் ரெயில் மறியல், பஸ் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையிய்ல உள்ள லயோலா கல்லூரியில் இன்று காலை முதல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை  நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரி மாணவர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள்கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பா கல்லூரியிலும், சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள மாநிலக்கல்லூரி மற்றும் நந்தனம் ஒய்எம்சிஏ அரசு கலைக்கல்லூரி போன்றவைகளிலும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக கல்லூரிகள் அமைந்துள்ள  பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை கைவிடுமாறு  மாணவர்களிடம்  காவல் துறையினர்  வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் போராட்டம் காரணமாக பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று இரவு நீதிமன்றம் எதிரில் உள்ள ஏ.எப்.டி திடலில் திரண்ட 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று புதிய பேரூந்து நிலையத்தின் எதிரில் உள்ள சுதேசி மில் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.