சென்னை,

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டம் திட்டமிட்டபடி அறிவித்த நாளில் நடைபெறும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

மேலும்,  போராட்டத்தை கைவிட வேண்டும் என சென்னை காவல்துறை அழுத்தம் தருவதாகவும், ஆனால் அறிவித்தபடி வரும் 12ந்தேதி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி சென்னையில் வரும் 12-ம் தேதி பா.ம.க சார்பில் நடத்தப்படவிருந்த  என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஏற்கெனவே அறிவித்தபடி அன்றைய தினம் போராட்டம் நடைபெறும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

“நீட் தேர்வுக்கு எதிராக எந்தவிதப் போராட்டங்களையும் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகவும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை மிரட்டல் விடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் சொல்லாத ஒன்றை சொன்னதாகக் கூறி அரசு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், தகுதி இருந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மாணவி அனிதா உயிர்த் தியாகம் செய்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த தடை விதிக்கக் கோரி தே.மு.தி.க வழக்கறிஞர் மணி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாகச் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

நீட் போராட்டங்களுக்கு எதிரான இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் வழக்கறிஞர் மணி வலியுறுத்தியபோது, இதில் அவசரமாக விசாரிக்க என்ன இருக்கிறது என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அதே உச்ச நீதிமன்றம்  நேற்று இவ்வழக்கை அவசரமாக விசாரித்ததுடன், அதிலுள்ள பிற கோரிக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு, போராட்டங்களுக்கு எதிராக மட்டும் சில நிபந்தனைகளை விதித்திருப்பது வியப்பளிக்கிறது. அதேநேரத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கான உரிமைகளை நீதிமன்றம் பறிக்கவில்லை.

ஆனால், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை பிறப்பித்து இருப்பதாக சில ஊடகங்கள் அவசரப்பட்டு வெளியிட்ட செய்தியை நம்பியோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரித்தோ நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்திருக்கிறது. உண்மையில் நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

‘‘நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் -ஒழுங்கை பாதிக்கும் வகையிலோ, இயல்பு வாழ்க்கையைக் குலைக்கும் வகையிலோ பந்த் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது. அதேநேரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான போராட்டங்களை நடத்துவதோ விமர்சிப்பதோ, எதிர்ப்பு தெரிவிப்பதோ சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்குவதிலிருந்து மாறுபட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறோம்.

அமைதி வழியில் போராடுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை ஆகும்’’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து காவல்துறை விடுத்த மிரட்டல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறவிருந்த போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் வரும் 12-ம் தேதி பா.ம.க சார்பில் நடத்தப்படவிருந்த போராட்டத்தைக் கைவிட வேண்டும் என சென்னை காவல்துறை அதிகாரபூர்வமற்ற வகையில் அழுத்தம் தரப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு வெளியான பிறகும்கூட நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் குறித்த நிலையை காவல்துறைத் தெளிவுபடுத்தவில்லை.

தமிழக அரசு மற்றும் காவல்துறையின் நிலைப்பாடு சரியல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.