நீட் எதிர்ப்பு: சென்னையை முடக்கிய அரசு பள்ளி மாணவிகள்! போக்குவரத்து பாதிப்பு

Must read

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியல் செய்தனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அதை யடுத்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த சென்னை  நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்  அருகிலுள்ள நெடுஞ்சாலையை மறித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் சாலையில் அமர்ந்து மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக நுங்கம்பாக்கத்திலிருந்து தி.நகர், கோடம்பாக்கம், மவுன்ரோடு, அண்ணாநகர் செல்லும் வழிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஸ்தம்பித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அகற்ற பெண் போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். ஆனால், மாணவிகள், தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என்றும், நாளைக்கு எங்களுக்கும் அனிதா போன்ற இதே நிலைதான் வரும் என்றும் கூறி போராடி வருகின்றனர்.

மாணவிகளின் போராட்டத்தை ஒடுக்க தலைமைஆசிரியை அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் போராட்டத்தை விடாமல் செய்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை, அவர்களிடம் இந்த ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்றும், பள்ளியில் இருந்து விலக்கிவிடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர்கள் தலைமை ஆசிரியையின் மிரட்டலுக்கு செவிசாய்க்காமல் போராடி வருகின்றனர்.

போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதி பெண்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

More articles

Latest article